ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!
வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் 22 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட்-யுஜி தேர்வு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவு பெற அவசியமானது. 2026-27 கல்வியாண்டுக்கான தேர்வு கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதில் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். துபாய் உள்ளிட்ட 14 வெளிநாட்டு மையங்களும் இதில் அடக்கம். ஆனால், தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து NTA உடனடியாக தேர்வை ரத்து செய்து, மறுதேர்வை வரும் ஜூன் 21-ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்தது. இந்த முடிவு ஏராளமான மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ஜுன்ஜுனு மாவட்டம் சிகர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மெஹ்வால் (22) என்ற மாணவர், தனது சகோதரியுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக நீட் பயிற்சி பெற்று வந்தார். மே 3-ம் தேதி தேர்வை எழுதிய அவர், வீட்டுக்கு வந்தவுடன் பெற்றோரிடம் “தேர்வு சிறப்பாக இருந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். எனினும், தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி அவரை ஆழ்ந்த விரக்திக்கு உள்ளாக்கியது.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!
மறுதேர்வில் முந்தைய நாளைப் போல சிறப்பாக எழுத முடியுமா? என்ற கவலை அவரை உறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் தாங்காமல், நேற்று (மே 15) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரதீப்பின் பெற்றோர், “நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தமே மகன் தற்கொலைக்கு காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் தொடர்ந்து ஏற்படும் முறைகேடுகள் மற்றும் தாமதங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் நீட் தேர்வு முறையின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!