சிதறிய ஏவுகணை பாகங்கள் மோதி இந்தியர் உட்பட 2 பேர் பலி!! அபுதாபியில் அரங்கேறிய சோகம்!!
அபுதாபியில் ஈரான் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்த போது, அதில் இருந்து சிதறிய பாகங்கள் மோதி இந்தியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தலைநகர் அபுதாபியில் ஈரான் ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோது, அதில் இருந்து சிதறிய பாகங்கள் தரையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிதறல்களால் இந்தியர் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் வளைகுடா நாடுகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழலில் அபுதாபியின் ஸ்வீஹான் சாலைப் பகுதியில் நேற்று (மார்ச் 26, 2026) நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யுஏஇ வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. ஆனால், அந்த ஏவுகணையின் சிதறிய பாகங்கள் சாலையில் விழுந்ததில், இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த மூன்று பேரில் ஒருவர் இந்தியர், மற்றவர்கள் யுஏஇ மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. சில வாகனங்களும் சேதமடைந்தன.
இதையும் படிங்க: ஈரானுக்கு ஆதரவாக வந்த லெபானான்!! இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்!! 9 பேர் பலி!
அபுதாபி ஊடக அலுவலகம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், “வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது. அதன் சிதறல்கள் விழுந்ததில் இரு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். இது குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளது.
மேற்காசியப் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்தியர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திய தூதரகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம், மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல் வழிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்தியா தனது குடிமக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புமாறு யுஏஇ அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டம்?! முன்மொழியும் பாக்.,! ஏற்குமா ஈரான்?!!