×
 

விண்வெளி வீரர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி! ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26 கோடியில் உருவாகும் ‘ககன்யாத்ரி நிவாஸ்’

விண்வெளி வீரர்களுக்காக, 26 கோடி ரூபாய் செலவில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், 'ககன்யாத்ரி நிவாஸ்' என்ற தனிமைப்படுத்தும் கட்டமைப்பை, 'இஸ்ரோ' உருவாக்க உள்ளது.

இந்திய விண்வெளி வீரர்களுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26 கோடி செலவில் புதிய தனிமைப்படுத்தும் மற்றும் பயிற்சி மையம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘ககன்யாத்ரி நிவாஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மையம், எதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு நாட்டிலேயே முழுமையான பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, எதிர்காலத்தில் ‘பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்’ என்ற பெயரில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கான முழுமையான பயிற்சி மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறப்பு மையங்களிலும் பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரசாந்த் நாயர், சுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப் மற்றும் அஜித் கிருஷ்ணன் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் காகரின் விண்வெளி மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா தொடர்பான வசதிகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

இந்த நிலையை மாற்றும் வகையில், இந்தியாவிலேயே விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக வசதியை உருவாக்க இஸ்ரோ தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26.02 கோடி மதிப்பீட்டில் ‘ககன்யாத்ரி நிவாஸ்’ அமைக்கப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் விண்வெளி பயணத்துக்கு முன் வீரர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இருக்கும். விண்வெளி பயணத்தின்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் பயிற்சி வழங்கப்படும்.

குறிப்பாக, விண்கலத்தில் பல மணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதற்கான பயிற்சி, உடற்பயிற்சி, தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன் வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்கான தனிமைப்படுத்தும் நடைமுறைகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ‘ககன்யாத்ரி நிவாஸ்’ போன்ற உள்நாட்டு வசதிகள் வெளிநாட்டு மையங்களைச் சார்ந்திருப்பதை குறைப்பதுடன், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி அளிக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share