இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா? கடும் விதிகளை அமல்படுத்திய விண்வெளித் துறை!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ ராஜினமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது.
இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ககன்யான், சந்திரயான்-3, ஸ்பாடெக்ஸ் உள்ளிட்ட முக்கிய தேசிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றிய அனுபவமிக்க விஞ்ஞானிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவதால், இஸ்ரோவின் மனிதவள மேலாண்மை குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.
தற்போது இஸ்ரோவில் 14,600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மொத்த பணியாளர்களுடன் ஒப்பிடும்போது ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், முக்கிய திட்டங்களில் ஈடுபட்டிருந்த மூத்த மற்றும் திறமையான விஞ்ஞானிகள் விலகியிருப்பதே கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் ராஜினாமா செய்துள்ளதாகவும், யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சுமார் 80 விஞ்ஞானிகள் விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய உயர்நிலை சாலை திட்டம் ரத்து? அமைச்சரவையில் முக்கிய முடிவு!
ராஜினாமா செய்தவர்களில் எல்விஎம்-3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், ஸ்பாடெக்ஸ் திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இளம் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பணிகளை ஒருங்கிணைத்த திட்ட மேலாளர் ஆதித்யா ரல்லபள்ளியும் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012 முதல் 2024 வரை மொத்தம் சுமார் 700 ஊழியர்கள் இஸ்ரோவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இஸ்ரோ ராஜினாமா தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பணியாற்றும் குரூப்-ஏ விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு கோரிக்கைகளை இனி அந்தந்த மைய இயக்குநர்கள் நேரடியாக ஏற்க முடியாது.
அனைத்து விண்ணப்பங்களும் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறை (DoS) பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், முக்கிய திட்டங்கள் நிறைவடையும் வரை அவற்றை ஏற்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில், எந்த நிறுவனத்திலும் பணியாளர்கள் விலகுவது இயல்பான ஒன்று என்றாலும், அதனால் தேசிய திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், 2025-26 ஆண்டுக்குள் 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 22 ஆண்டுகளாக மறையாத சோகம்! 94 குழந்தைகளை நினைவுகூர்ந்து உருக்கமான அஞ்சலி!