பிரிக்ஸ் நடுநிலையா செயல்படணும்! போரை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் தரும் ஈரான்! தர்மசங்கடத்தில் மோடி!
பிரதமர் மோடி பிரதானமாக, போருக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பையும், ஏற்றுமதி வழித்தடங்கள் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் பெசஸ்கியானிடம் வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈத் பெருநாள் மற்றும் ஈரானிய புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடலில் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேசினர்.
பிரதமர் மோடி, ஈரான் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்படுவதில் கவலை தெரிவித்தார். குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி சீராக இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி வழித்தடங்கள் சீராக இயங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தங்கள் “சட்டவிரோத தாக்குதல்களை” உடனடியாக நிறுத்தினால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பு நடுநிலையுடன் செயல்பட்டு சமாதானத்துக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!
பெசஸ்கியான், தெற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிராந்திய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற யோசனையையும் மோடியிடம் முன்வைத்தார்.
பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய முக்கிய அமைப்பாகும். 2009 முதல் இந்த அமைப்பு உச்சி மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்தியா பலமுறை இந்த அமைப்புக்கு தலைமை தாங்கியுள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த தொலைபேசி உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மற்றும் வணிக நலன்களை கருத்தில் கொண்டு மோடி எடுத்துள்ள இந்த முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!