×
 

தமிழ்நாடு இன்னும் பலவற்றை இழக்கும்! திமுகவை எச்சரித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பெண்களுக்கான வாய்ப்பைப் பாழ்படுத்திவிட்டனர் நாடாளுமன்றத்தில் மசோதா வீழ்ந்ததற்குத் தமிழக பாஜக தலைவர்கள் கண்டனம்.

நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவின் பிடிவாதமான அரசியல் போக்கினால் தமிழகம் பெரும் வாய்ப்புகளைத் தவறவிட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.

திமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் பிடிவாதம் மற்றும் குறுகிய அரசியல் கண்ணோட்டம் கொண்ட திமுகவின் செயல்பாடுகளால், தமிழ்நாடு வரும் காலங்களில் இன்னும் பல முக்கியமான திட்டங்களையும் வாய்ப்புகளையும் இழக்க நேரிடலாம். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைக் கூட, அரசியல் வெறுப்புணர்வால் திமுக எதிர்த்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது குறித்து அவர் வேதனை தெரிவித்தார் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பை, வெறுப்புணர்ச்சி நிறைந்த எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன. பெண்களின் அரசியல் அதிகாரத்தைப் பாழ்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்களித்தது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

மசோதா தோல்வி அடைந்தாலும், மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். தொகுதி மறுவரையறை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெறும் ஒரு வெளிப்படையான செயல்முறை. எந்த மாநிலமும் பாதிக்கப்படாது எனப் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலமுறை விளக்கம் அளித்தும், அதனை ஏற்க மறுப்பது தமிழகத்தின் குரலைத் தேசிய அளவில் பலவீனப்படுத்தும் செயலாகும்" என அவர் சாடினார்.

ஏற்கனவே தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிதிப் பகிர்வு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மோதல் நிலவி வரும் சூழலில், திமுகவிடம் 'பிரிவினைவாத மனநிலை' மேலோங்கியிருப்பதாக நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். "மாநில நலனை விட அரசியல் லாபமே திமுகவிற்கு முக்கியமாகத் தெரிகிறது என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மக்களவையில் மசோதா தோல்வி அடைந்ததை முதலமைச்சர் ஸ்டாலின் 'தமிழகத்தின் வெற்றி' எனக் கொண்டாடி வரும் நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு டெல்லி மற்றும் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை அனல் பறக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: இன்று மாலை வாக்கெடுப்பு! மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீது விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share