பஹல்காம் தாக்குதல்!! ஹபீஸ் சையத்திற்கு என்ஐஏ அதிரடி... பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வழக்கில், சர்வதேச பயங்கரவாதியான ஹபீஸ் சையத்திற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்" பொறுப்பேற்றதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரும், 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய மூளையாகக் கருதப்படும் ஹபீஸ் சையத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதாவைச் சேர்ந்த ஹபீஸ் சையத், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ளதுடன், கைது நடவடிக்கையில் இருந்து திட்டமிட்டு தலைமறைவாக இருந்து வருவதாக என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை பரிசீலித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜம்முவில் உள்ள என்ஐஏ துணை காவல் கண்காணிப்பாளர் (டிஐஜி) அலுவலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் வழக்கில் தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களை சேகரித்து வரும் என்ஐஏ, தாக்குதலின் சதித்திட்டம், அதில் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஹபீஸ் சையத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட், சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!