×
 

“யாரும் கவலைப்பட வேண்டாம்… நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” கூட்டணி எம்.பி.,க்களுக்கு மோடி உறுதி

புதிதாக கூட்டணியில் இணைந்த கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு இந்த வார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த மக்களவை எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி நேற்று காலை உணவு விருந்து அளித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த ககோலி தஸ்திதார் கோஷ், சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா அணியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 45 எம்.பி.,க்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.,க்களுடன் உணவு அருந்தியபடியே உரையாடிய பிரதமர் மோடி, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் உன்னத கோவில் என குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் கூச்சல் காரணமாக புதிய எம்.பி.,க்களுக்கு அவையில் தங்களது கருத்துகளை எடுத்துரைக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும், இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்றத்தின் வரலாற்றை புதிய எம்.பி.,க்கள் படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். நாடாளுமன்றத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பயன்படுத்தி, தங்களது விவாதங்களுக்கும் உரைகளுக்கும் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு எம்.பி.,யும் தங்களது தொகுதி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். மாநிலங்கள் முன்னேறினால் மட்டுமே நாடு முன்னேறும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் கூட்டணியில் இணைந்த எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி நம்பிக்கை அளிக்கும் வகையிலும் பேசியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பம் போன்றது என்றும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் உரிய மரியாதையும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“கூட்டணியின் ஒவ்வொரு எம்.பி.,யும் எனக்கு முக்கியம். நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன். யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம்” என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக புதிதாக கூட்டணியில் இணைந்த கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு இந்த வார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தங்களது தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்றும் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கும் பிரதமர் இதேபோன்ற விருந்து அளித்து ஆலோசனைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share