இந்தியா - பிரான்ஸ் இணையும் பாரத் இன்னோவேட்ஸ் ரொம்ப முக்கியம்! 6 நாட்கள் வெளிநாடு பயணம்! மோடி அசத்தல்!
டெல்லியில் இருந்து இன்று பிரதமர் மோடி 6 நாட்கள் வெளிநாட்டு பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு புறப்பட்டு சென்றார்.
இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆறு நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக 52-வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
பயணத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், இருதரப்பு உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, புதுமை முயற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் பிரான்சின் நைஸ் நகரில் தொடங்குகிறது. அங்கு நடைபெறும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து ‘இந்தியா – பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு’ கொண்டாடி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி இரு நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் புதுமைத் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி அரசியலிலும் சிக்சர் அடித்த விஜய்! அசந்து போன மோடி, அமித்ஷா! தரமான சம்பவம்!
இதனைத் தொடர்ந்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் 52-வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்களுடன் அவர் தனிப்பட்ட மற்றும் பல்தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார். உலக பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 18-ஆம் தேதி பாரிஸில் நடைபெறும் ‘விவாடெக் 2026’ மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஐரோப்பாவின் முக்கிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மாநாடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நிகழ்வில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதுமைத் துறையினருடன் அவர் கலந்துரையாட உள்ளார்.
மேலும், பிரான்சில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாற்ற பிரதமர் திட்டமிட்டுள்ளார். இந்த பயணம் இந்தியாவின் சர்வதேச செல்வாக்கை உயர்த்துவதோடு, ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 18-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி டெல்லி திரும்ப உள்ளார்.
இதையும் படிங்க: வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!