ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக கிர்கிஸ்தானின் பிஷ்கக்கில் நடைபெறும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார். இதில் ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாதி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை! பிரதமர் மோடி ஆதங்கம்! அதிரடி அறிவுரை!
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா–ரஷ்யா இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் தற்போதைய சர்வதேச சூழல் ஆகியவற்றின் பின்னணியில் மோடி–புடின் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்திற்கும், தாஷ்கந்த் மாநிலப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்திற்கும் அவர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளில் விவாதிக்கப்படலாம்.
இதனால், பிரதமர் மோடியின் 4 நாள் வெளிநாட்டு பயணம் இந்தியாவின் பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. குறிப்பாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே நடைபெற உள்ளதாக கூறப்படும் மோடி–புடின் சந்திப்பை சர்வதேச அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு