வேகமாக வளர்ந்து வரும் இந்தியா! குவாலிட்டி தான் முக்கியம் இப்போ!! மனதின் குரலில் மோடி கொடுத்த அட்வைஸ்!
''நாம் உற்பத்தி செய்யும் பொருட்களில், தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது,'' என 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 25, 2026) நிகழ்த்திய மன் கி பாத் உரையில், "நாம் உற்பத்தி செய்யும் பொருட்களில் தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது" என்று வலியுறுத்தியுள்ளார். 2026-ஆம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
நாளை ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் என்பதை நினைவுகூர்ந்த அவர், இன்று தேசிய வாக்காளர் தினம் என்பதால் 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். இது இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய படியாக அமையும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில் இந்தியாவின் வளர்ச்சியை பல்வேறு கோணங்களில் எடுத்துரைத்தார். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 77வது குடியரசு தினம்!! இன்று மக்களிடையே உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
இளைஞர்களின் பங்களிப்பால் புதுமை, வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். நமது கலாசாரமும் பண்டிகைகளும் உலகம் முழுவதும் பரவி, இந்திய வம்சாவளியினரால் பாதுகாக்கப்பட்டு வருவதை பாராட்டினார்.
குறிப்பாக மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் பணியை புகழ்ந்த அவர், அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருவதை சுட்டிக்காட்டினார். தமிழ் மொழியை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், பிற பாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுவதாகவும், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம் போன்ற அமைப்புகள் இந்தியா-மலேசியா வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசிய பிரதமர், இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், தரம் (Quality) மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தினார்.
"தரம், தரம், தரம்" என்ற தாரக மந்திரத்துடன், நேற்றையதை விட இன்று சிறந்த தரத்தை வழங்க வேண்டும் என்றும், இந்திய பொருட்கள் என்றால் உயர்தரம் என்ற எண்ணத்தை உலகில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது என்றும், இதன் மூலமே வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை பணிகளைப் பற்றியும் பேசிய அவர், பல நகரங்களில் குப்பை மறுசுழற்சி குழுக்கள் சிறப்பாக செயல்படுவதை பாராட்டினார். சென்னையில் இதுபோன்ற ஒரு குழு சிறந்த பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார். தனிநபர் அல்லது குழுவாக தூய்மை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 800 பெண் விவசாயிகள் இணைந்து சிறு தானிய பொருட்களை தயாரித்து நேரடியாக சந்தைக்கு விற்பனை செய்து வருவதை பாராட்டிய பிரதமர், அவர்களது பணியை பாராட்டத்தக்கது என்று கூறினார்.
அதேபோல் ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் நீர்நிலைகளை தூர்வாரி, 10 நீர்நிலைகளை நிரப்பி, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தியதை புகழ்ந்தார். அங்கு இப்போது குழந்தைகள் நீச்சல் அடிக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டினார்.
குஜராத்தின் பேச்ராஜீல் உள்ள சந்தன் கிராமத்தில் உள்ள சமுதாய சமையல் கூட பாரம்பரியத்தை பாராட்டிய பிரதமர், அடுத்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்து விரிவாக பேசுவேன் என்றும், மேலும் சில சாதனைகளைப் பகிர்ந்து கொள்வேன் என்றும் தெரிவித்தார். குடியரசு தின வாழ்த்துகளுடன் உரையை நிறைவு செய்தார்.
இந்த உரை தேசிய ஒற்றுமை, தரமான உற்பத்தி, கலாசார பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. குறிப்பாக தரத்திற்கு முன்னுரிமை என்ற கோஷம் உற்பத்தியாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹை அலர்ட்டில் சென்னை! ட்ரோன்கள் பறக்க தடை! 60 நாட்கள் தடை உத்தரவை நீட்டித்த காவல்துறை!!