போராட்டத்திற்கு நடுவே மயங்கி விழுந்த பெண் எம்.பி.. சட்டென ராகுல் காந்தி செய்த செயல்..!!
டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது மயங்கி விழுந்த பெண் எம்.பியை ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இணைந்து டெல்லியில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இன்று பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.
காலை தொடங்கிய இந்த பேரணி, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்றபோது, டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டனர். "நாங்கள் அரசியலமைப்பை காப்பாற்றவும், 'ஒருவருக்கு ஒரு வாக்கு' என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் போராடுகிறோம்," என ராகுல் காந்தி கூறினார்.
கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதனை அடிப்படையாக வைத்து, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவே இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லியில் எம்.பி.களுக்கான சொகுசு அபார்ட்மெண்ட்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!
காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்திய ராகுல், இந்த முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல அடுத்தகட்ட திட்டங்கள் வகுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்தப் போராட்டம், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா கூட்டணி, இந்தப் பிரச்சனையை தொடர்ந்து முன்னெடுத்து, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க போராட்டங்களை தீவிரப்படுத்தும் என அறிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1954802320211873828
இந்த பரபரப்புக்கு நடுவே, போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. அங்குப் புழுக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெண் எம்.பிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மிதாலி பாக், போராட்டக் களத்திலேயே மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்ட ராகுல் காந்தி இதைக் கவனித்தார். உடனடியாக அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, மயங்கி விழுந்த மிதாலி பாக்கை பத்திரமாக அழைத்துச் சென்று, காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: தலைநகர் டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் பரிதாப பலி..!!