பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!
டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, புது டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிரதமர் இல்லத்திற்கு அருகே நடைபெற்ற இந்தத் தொடர் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் உச்சகட்டப் பரபரப்பு நிலவியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் பேரணியாகப் பிரதமர் இல்லத்தை நோக்கிச் சென்றனர்.
பிரதமர் இல்லத்தின் அருகே அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், தலைவர்கள் அனைவரும் சாலையிலேயே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!
காங்கிரஸ் தலைவர்களின் இந்த அதிரடி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டக் களத்திற்கு விரைந்தார். அவரும் சாலையிலமர்ந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், டெல்லி காவல்துறையினர் அகிலேஷ் யாதவை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றி அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!