இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!
இந்த நாடு உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மிஸ்டர் மோடி எனக் கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை மிரட்டுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற மாணவர்கள் மற்றும் CJP அமைப்பின் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூர தடியடித் தாக்குதலுக்கு ஆப் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை மிகக் காரசாரமான வார்த்தைகளால் சாடினார்:இந்த நாடு உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மிஸ்டர் மோடி! இது 140 கோடி இந்தியர்களுக்குச் சொந்தமான ஜனநாயக நாடு. நாட்டின் எதிர்காலமான இளைஞர்களையும் மாணவர்களையும் மிரட்டுவதையும், அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உடனடியாக நிறுத்துங்கள்.
இல்லையெனில், வரலாறு என்றென்றும் நினைவுகூரும் வகையில் இந்திய மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்! சுதந்திரப் போராட்டத்தின் போது நம் மண்ணை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட, அமைதியான முறையில் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது இந்த அளவுக்கு கொடூரமான தடியடியை நடத்தியிருக்க மாட்டார்கள். கைகூப்பி வேண்டிய மாணவர்களையும், இளம் பெண்களையும் காவல்துறை இரக்கமின்றி அடித்துத் துவைக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதறவைக்கின்றன.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விஸ்வரூபம்? பிரதமர் மோடிக்கு ராகுல்-கார்கே கூட்டாக கடிதம்!
டெல்லி தடியடியில் காயமடைந்து ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களைச் சென்று நேரில் சந்தித்த கெஜ்ரிவால், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுப் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை இலவசமாக வழங்க ஆம் ஆத்மி கட்சி சார்பில் சிறப்பு உதவி எண் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தமது கட்சி முழுமையாகத் துணைநிற்கும் என்றும் அவர் அறிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய மாணவர் போராட்டம் தற்பொழுது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மேற்காசிய போர் முதல் ஹைட்ரஜன் ரயில் வரை... "இந்தியா சவால்களை சமாளிக்கிறது" என மோடி பெருமிதம்!