புதிய வடிவில் ரூபாய் நோட்டுகள்..!! 2027 ஏப்ரலில் தொடங்கும் பிளாஸ்டிக் நோட்டு காலம்..!!
காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.
இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, நீண்ட ஆயுள் கொண்ட பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நோட்டுகளை களச் சோதனைக்கு உட்படுத்தி, வெற்றி பெற்றால் வழக்கமான புழக்கத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தபடி, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய பரிந்துரையின் அடிப்படையில் தலா 100 கோடி எண்ணிக்கையில் (மொத்தம் 200 கோடி துண்டுகள்) ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் நோட்டுகளை சோதனைக்காக அச்சிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி. சோதனை வெற்றிகரமாக முடிந்தால் இந்த இரண்டு மதிப்புகளிலும் வழக்கமான அச்சிடல் தொடங்கும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சமீபத்திய பணக்கொள்கை அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் (2027-28 ஏப்ரல்) இவை புழக்கத்தில் வரும்.” இந்திய காலநிலை, பயன்பாட்டு முறை ஆகியவற்றில் இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை முதலில் சோதித்து, அதன் பிறகு அளவை அதிகரிக்கலாமா அல்லது மாற்றங்களுடன் செல்லலாமா என்பதை முடிவு செய்வோம் என்றார். பாலிமர் அடிப்படை பொருளுக்கான டெண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி NO TEAR.. NO WET..!! இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! RBI அதிரடி..!!
முக்கியமாக, பழைய காகித நோட்டுகள் உடனடியாக செல்லாதவை ஆகாது. பாலிமர் நோட்டுகளுடன் காகித நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாக மாற்றும் எந்தத் திட்டமும் தற்போது இல்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பாலிமர் நோட்டுகளின் நன்மைகள் பல. காகித நோட்டுகளை விட 2.5 முதல் 4 மடங்கு அதிக ஆயுள். தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது, அழுக்கடையாது.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை (தெளிவான சாளரம், சிறப்பு இழைகள் போன்றவை) சேர்க்க எளிது என்பதால் போலி நோட்டுகள் அச்சிடுவது கடினம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இவை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் (மொத்த எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம்) இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதற்கு முன் 2009-12 காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் தொழில்நுட்பச் சிக்கல்களால் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, அச்சிடும் செலவை நீண்ட காலத்தில் குறைக்கவும், பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப திறனை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்னும் ரூ.2000 நோட்டு கையில இருக்கா..?? ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்..!!