×
 

போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!! டெல்லியில் துவங்கியது கோலாகல குடியரசு திருநாள்!!

குடியரசு தினக் கொண்டாட்டம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், பாரம்பரிய வழக்கப்படி, டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் மோடி முதலில் மரியாதை செலுத்தினார்.


இந்தியாவின் 77வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26, 2026) டெல்லியில் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முதல் நிகழ்வாக, பாரம்பரிய வழக்கப்படி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவர் குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

குடியரசு தின விழாவின் மைய நிகழ்வாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் கடமைப் பாதையில் (ராஜ்பாத்) பிரம்மாண்ட அணிவகுப்பு காலை 10:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த அணிவகுப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வீரர்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருவார்கள். பிரதமர் மோடி அவர்களை வரவேற்ற பின்னர், குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றுவார்.

இதையும் படிங்க: வேகமாக வளர்ந்து வரும் இந்தியா! குவாலிட்டி தான் முக்கியம் இப்போ!! மனதின் குரலில் மோடி கொடுத்த அட்வைஸ்!

அப்போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த நான்கு எம்ஐ-17வி ஹெலிகாப்டர்கள் விழா பகுதியின் மேல் பறந்து, தேசியக் கொடி மீதும் பார்வையாளர்கள் மீதும் மலர்தூவி செல்லும். அதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

பரம வீர சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ், சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் ஜெனரல் சி.ஏ. பிதவாலியா, கர்னல் டி. ஸ்ரீராம் உள்ளிட்ட வீர திர செயல்களுக்காக உயரிய விருதுகள் பெற்றோர் அணிவகுத்துச் செல்வார்கள். ஐரோப்பிய யூனியன் ராணுவ வீரர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

இந்திய ராணுவத்தின் படை வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அர்ஜுன் டாங்கி, கவச வாகனங்கள், பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூர்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சர், நாக் ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அணிவகுத்துச் செல்லும். அதைத் தொடர்ந்து 30 கலாசார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். இதில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசார ஊர்திகளும், 13 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஊர்திகளும் இடம்பெறும். 2,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

சிஆர்பிஎஃப், எஸ்எஸ்பி படைகளைச் சேர்ந்த வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து காட்டுவார்கள். இந்திய விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறும். டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் குடியரசு தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 10:30 மணிக்கு தொடங்கும் அணிவகுப்பு இந்தியாவின் வலிமை, பன்முகத்தன்மை, ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்தும்.

இதையும் படிங்க: 77வது குடியரசு தினம்!! இன்று மக்களிடையே உரையாற்றுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share