நாளை சபரிமலை மகரஜோதி... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... ஸ்தம்பிப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம் நிகழவுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி நாளில் நடைபெறும் மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வு. லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இந்த தினத்திற்காகக் காத்திருப்பார்கள். இந்த நாள் மண்டல-மகரவிளக்கு புனித யாத்திரையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது.
மகரஜோதி என்பது பொன்னம்பலமேடு மலையில் தோன்றும் தெய்வீக ஒளி. சன்னிதானத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடத்தில் மாலை நேரத்தில் மூன்று முறை ஜோதி தோன்றும். பக்தர்கள் இதை ஐயப்பனின் அருளாகவே பார்க்கிறார்கள். இந்த ஒளி தரிசனம் மனதைத் தூய்மையாக்கி, விருப்பங்கள் நிறைவேறுவதற்கும், ஆன்மீக பலத்தை அளிப்பதற்கும் காரணமாக அமைகிறது என்று நம்பிக்கை.
இந்த ஆண்டு மகரவிளக்கு தினம் புதன்கிழமை வருகிறது. சங்கராந்தி முறைப்படி மதியம் 3:13 மணிக்கு சூரியன் மகர ராசிக்கு மாறும் நேரம். அதன் பிறகு மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஜோதி தரிசனம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாபரண பெட்டி ஊர்வலம் ஏற்கனவே பந்தளத்திலிருந்து புறப்பட்டு சன்னிதானத்தை அடைந்திருக்கும். ஐயப்பனுக்கு இந்த அணிகலன்கள் அணிவிக்கப்பட்ட பிறகே ஜோதி தோன்றும் என்ற பாரம்பரியம்.பக்தர்கள் கூட்டம் இந்த நாளில் அலைமோதும்.
இதையும் படிங்க: “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!
ஏற்கனவே லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் க்யூ முன்பதிவு மூலம் சுமார் 35,000 பேர் மட்டுமே சன்னிதானத்தில் நுழைய அனுமதிக்கப்படலாம் என்றாலும், மொத்த கூட்டம் அதிகமாக இருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக உள்ளன. சுமார் 2,000 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாரம்பரிய பார்வை இடங்களான பண்டிதவலம், சாரம்குத்தி, யு-டர்ன் போன்ற இடங்களில் இருந்து ஜோதியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காட்டுப்பாதைகளில் கொட்டில் அமைப்பது, அங்கு சமைப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. ஜோதி தரிசனத்திற்குப் பிறகு சன்னிதானத்திற்கு காட்டுப்பாதை வழியாக வர அனுமதி இல்லை. சத்ரா அல்லது வல்லக்கடவு வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இதையும் படிங்க: நெருங்கும் காணும் பொங்கல்... தீவிர பாதுகாப்பு பணி... மெரினாவில் குளிக்கத் தடை...!