×
 

சடங்குக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு!  சபரிமலை வழக்கில் பரபரப்பு மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற 2018-ஆம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யும் மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற 2018-ஆம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யும் மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, மதச் சடங்குகள் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரம் குறித்து மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்: ஒரு மதத்தின் சடங்கு எது? மூடநம்பிக்கை எது? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. நீதிபதிகள் சட்ட வல்லுநர்களே தவிர, அவர்கள் மத அறிஞர்கள் (Theological Experts) அல்ல. மத நூல்களை ஆய்வு செய்து சடங்குகளை வகைப்படுத்துவது நீதிமன்றங்களால் முடியாத காரியம். இது போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தின் முடிவிற்கே விட்டுவிட வேண்டும் என அவர் வாதிட்டார்.

தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்க மறுத்துத் தனது அதிருப்தியைப் பதிவு செய்தது: ஒரு சடங்கை மூடநம்பிக்கையா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு. சட்டம் மற்றும் பொது ஒழுங்கு பாதிக்கும் போது நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது. நாளை யாராவது ஒரு பிரிவினர் பில்லி சூனியம் (Witchcraft) அல்லது நரபலி போன்ற நடைமுறைகளைத் தங்களது மதம் எனக் கூறித் தொடர்ந்தால், அது மூடநம்பிக்கை என்று கூறி நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாதா? என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விசாரணையில் பங்கேற்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, சமூகத் தீமைகளை ஒருபோதும் மதச் சடங்கு என்ற போர்வையில் மூடி மறைக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு மாறாக எத்தகைய சடங்குகள் இருந்தாலும் நீதிமன்றம் அதை ஆய்வு செய்யும் எனத் தெரிவித்தார்.

கடந்த 2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது 'தீண்டாமைக்கு' எதிரானது எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு, இது தீண்டாமை விவகாரம் அல்ல, இது ஒரு குறிப்பிட்ட கடவுளின் தனித்தன்மை (Naisthika Brahmachari) சார்ந்த விஷயம் என வாதிட்டு வருகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு, இந்தியாவில் மதச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றிற்கிடையிலான எல்லையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மேற்காசிய போரால் முடங்கிய தொழில்கள்..!! ரூ.2.50 லட்சம் கோடி கடன்..!! மத்திய அரசு முடிவால் நிம்மதி..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share