தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
குழந்தைகளை தத்தெடுக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் தங்களது பணியிடத்தில் மகப்பேறு விடுமுறை எடுக்கும் உரிமையை உறுதி செய்யும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இனிமேல் தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயதைக் கணக்கில் கொள்ளாமல், தத்தெடுக்கும் அனைத்துத் தாய்மார்களுக்கும் 12 வார கால மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த விதியின்படி, 3 மாதங்களுக்குக் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த 3 மாத வயது வரம்பு நிபந்தனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
3 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தையைத் தத்தெடுத்தாலும், அக்குழந்தையுடன் பந்தத்தை உருவாக்கவும், பராமரிக்கவும் தாய்க்கு அவகாசம் தேவை என்பதை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எனவே, குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும் 12 வார விடுமுறை கட்டாயம். மகப்பேறு நலச் சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் இந்த உரிமை வழங்கப்படுகிறது. உயிரியல் ரீதியாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாகத் தத்தெடுக்கும் தாய்மார்களையும் நடத்த வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் நோக்கம்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
குழந்தையைத் தத்தெடுக்கும் முடிவை எடுக்கும் பெண்கள், பணியிடத்தில் தங்களது உரிமைகளை இழக்கக் கூடாது. சமூகத்தில் தத்தெடுப்பதை ஊக்குவிக்கவும், குழந்தையின் நலனை உறுதி செய்யவும் இந்த விடுமுறை அவசியமானது என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக, மூத்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெற்றோருக்கு இது மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!