சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்! 32 பேர் இறந்த துயரம்! காங்., நிர்வாகிக்கு பங்கு இருப்பதாக நட்டா குற்றச்சாட்டு!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் உட்பட 32 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பங்கு உண்டு எனநட்டா கூறியுள்ளார்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, 2013-ஆம் ஆண்டு ஜிராம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளுக்கு பங்கு இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதலில் காங்கிரஸ் மாநில தலைவர் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013 மே மாதம் சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஜிராம் பள்ளத்தாக்கில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் வித்யாசரண் சுக்லா உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறையும், சிபிஐயும் பாஜகவின் ஆயுதம்! காங்கிரஸை தான் குறிவைக்கிறாங்க! ராகுல்காந்தி ஆதங்கம்!
சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய ஜே.பி. நட்டா, “அப்போது நான் சத்தீஸ்கர் மாநில பாஜக பொறுப்பாளராக இருந்தேன். ஜிராம் பள்ளத்தாக்கு தாக்குதல் குறித்த உள் விவரங்கள் எனக்கு நன்றாகத் தெரியும்.
மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த சிலர் தங்கள் சொந்தக் கட்சித் தலைவர்களையே கொல்வதற்கு காரணமாக இருந்தனர். பாதுகாக்க வேண்டியவர்களே சதிகாரர்களாக மாறினால், சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து செயல்பட்டனர். ஆனால், இப்போது மோடி தலைமையிலான இரட்டை என்ஜின் அரசு இடதுசாரி பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்து வருகிறது” என்று கூறினார்.
முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான அரசு மாவோயிஸ்ட்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாராட்டினார். கடந்த இரு ஆண்டுகளில் 2,500 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர், முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 1,853 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நட்டாவின் இந்த குற்றச்சாட்டு சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிராம் பள்ளத்தாக்கு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே என்ஐஏ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது நட்டா மீண்டும் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது தேர்தல் அரசியல் சூடுபிடிக்கும் நிலையில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மோடிக்கு கல்லறை?! கூட்டத்துல யாரோ கத்துனாங்க! பிரியங்கா காந்தி புதுவிளக்கம்!