வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நாடு கடத்த தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரின் தண்டனை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவரை ஜெர்மனிக்குத் திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலில் பல நூற்றாண்டுகள் பழமையான பஞ்சலோக சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்குக் கடத்திய வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் புள்ளியான சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துக் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுபாஷ் சந்திர கபூரின் தண்டனைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை ஜெர்மனி நாட்டுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து எஸ். விஜயநாராயணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று தீவிர விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி ஓய்வறை..! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

மனுதாரர் எஸ். விஜயநாராயணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராம் சங்கர் மற்றும் பி.வி. யோகேஸ்வரன் ஆகியோர் வாதிடுகையில், "பல்வேறு பழங்காலத் திருக்கோயில் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றவர் சுபாஷ் சந்திர கபூர். ஒரு வழக்கின் தண்டனை முடிந்துவிட்ட காரணத்திற்காக அவரை மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மத்திய அரசோ அல்லது மாநில அரசோ மேல்முறையீடு செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரைத் திருப்பி அனுப்புவதோ அல்லது சிறையில் வைத்திருப்பதோ மட்டுமே இங்கு முக்கியமல்ல; அவரால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு விற்கப்பட்ட தமிழ்நாட்டின் அரிய பொக்கிஷங்களான தொன்மையான சிலைகள் முழுமையாக மீட்கப்பட வேண்டும். எனவே, மதுரை கிளை உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த சுபாஷ் சந்திர கபூர் தரப்பு வழக்கறிஞர், "சுபாஷ் சந்திர கபூர் ஏற்கனவே 15 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளார். தண்டனைக் காலமும் நிறைவடைந்துவிட்ட நிலையில், 79 வயதான ஒரு முதியவரை இனியும் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் சட்டப்படி அவரை ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு ஏன் மேல்முறையீடு செய்ய முனைப்பு காட்டவில்லை எனக் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை மற்றும் சுபாஷ் சந்திர கபூர் ஆகியோர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी