சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்திய நீதித்துறையின் நிர்வாகக் கட்டமைப்புகளில் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மாநில பார் கவுன்சில்களில் 30% இடங்கள் கட்டாயம் பெண் வழக்கறிஞர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள் கிழமை) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர்கள் யோகமாயா எம்.ஜி. மற்றும் ஷெஹ்லா சௌத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
30% ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறை, தேர்தல் அறிவிக்கப்படாத பார் கவுன்சில்களுக்கு, இந்த 30% பெண் பிரதிநிதித்துவம் பின்வரும் கலப்பு முறையில் அமல்படுத்தப்படும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 20% இடங்கள் பெண் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும். 10% இடங்கள் நியமனம் (Co-option) மூலம் நிரப்பப்பட வேண்டும்.
இதையும் படிங்க: IND vs SA: ஜெயஸ்வால் சதம், கோலி, ரோஹித் மிரட்டல்! ODI தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி!
பெண் உறுப்பினர்கள் போட்டியிடத் தயக்கம் காட்டும் சூழலிலும் அல்லது போதுமான பெண் வழக்கறிஞர்கள் இல்லாத இடங்களிலும், இறுதியில் பெண்களுக்கு 30% பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கெனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் & ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, பீகார், சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநில பார் கவுன்சில்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. எனினும், வழக்கறிஞர்-வாக்காளர்கள் இந்த ஆறு கவுன்சில்களிலும் பெண் உறுப்பினர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்திய பார் கவுன்சிலின் (BCI) தலைவர், சீனியர் வழக்கறிஞர் மனன் குமார் மிஸ்ரா அவர்கள், கொள்கை அளவில் 30% இட ஒதுக்கீட்டை ஆதரித்த போதிலும், நீதிமன்றம் நியமனத்தை 10% என மட்டுமே அனுமதித்தது. தமிழக பார் கவுன்சிலின் இணைத் தலைவர் கே. பாலு அவர்கள், 30% ஒதுக்கீட்டை ஆதரித்து நீதிமன்றத்தில் ஒரு தலையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த உத்தரவு, சட்டத் துறையின் நிர்வாகக் கட்டமைப்புகளில் பெண் வழக்கறிஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விமான சேவை ரத்து: பல்லாயிரம் பயணிகள் பாதிப்பு; இண்டிகோ CEO பதவி நீக்கம் என தகவல்!