திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!
திருப்பதி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை திருப்பதிக்கு வந்து சேர்ந்த ஈஷார் விரைவு ரயிலை சுத்தம் செய்வதற்காக திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள சுத்தம் செய்யும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தண்டவாளங்களை மாற்றும்போது ராயலசீமா – சீரடி எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென்று புகை வருவதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்கு இடையே சிறிய பொறியாக ஏற்பட்ட தீ விபத்து பெரும் தீ விபத்தாக மாறி அந்த ரயில் பெட்டி முழுவதுமாக பற்றி எரிய துவங்கியது. இந்தத் தகவல் அறிந்த ரயிலின் ஓட்டுநர் உடனடியாக மற்ற பெட்டிகளை கழற்றி விடச் செய்து, ரயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தி, ரயில் நிலையத்திற்கு கிழக்கே பீமாஸ் ரெசிடென்சி ஹோட்டல் அருகே உள்ள தண்டவாளத்தில் நிறுத்தினார்.
இதையும் படிங்க: பக்தர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. திருப்பதியில் இனி லட்டு வாங்குவது ரொம்ப ஈஸியாம்..!
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பற்றிய பெட்டிகளுக்குள் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாததால், தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து திருப்பதி ரயில்வே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “இந்தச் சம்பவம் ரயில் நடவடிக்கைகளில் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து வெளியில் செல்லும், உள்ளே வரும் ரயில் சேவைகளில் எந்த இடையூறும் ஏற்படவில்லை,” என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நேற்று திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகே கச்சா எண்ணெய் ஏற்றி சென்றன சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டது. 23 டேங்கர்களில் தீ பரவிய நிலையில், 8 டேங்கர்கள் தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. விபத்து ஏற்பட்ட இடத்தில் 200 மீ தொலைவுக்கு தண்டவாளம் மற்றும் ரயில் மின்சார கேபிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திருப்பதியில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!