உக்ரைனை எப்படி தாக்க போறீங்க! புடினிடன் கேட்கிறார் மோடி! இந்தியா மீது நேட்டோ வைக்கும் புகார்!
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, உக்ரைன் போா் குறித்த ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருவதாக நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் தலைவா் மாா்க் ருட்ட தெரிவித்தாா்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இதற்கு கூடுதலாக, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான அதிருப்தியால் மற்றொரு 25 சதவீத வரியை விதித்து, மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா அமல்படுத்தியது. இது இந்தியாவின் ஏற்றுமதி துறைகளான ஜவுளி, நகை, ஆட்டோ பார்ட்ஸ், கடல் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பெரிதும் பாதிக்கும்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அண்மையில் பேசிய டிரம்ப், "ரஷ்யாவிடமிருந்து இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மை நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷ்ய எரிசக்தியை பெரிய அளவில் குறைக்கவில்லை" என்று குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேட்டோ தலைவர் மார்க் ருட்ட, வியாழக்கிழமை (செப்டம்பர் 25) செய்தித்தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்திய பொருட்களுக்கு டிரம்ப் விதித்த வரி, ரஷ்யா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கோருகிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஷ்ய துணை பிரதமருடன் சந்திப்பு! மோடி போடும் பக்கா ஸ்கெட்ச்! அமெரிக்கா ஆட்டத்துக்கு கல்தா!
நேட்டோ தலைவரின் இந்தக் கூற்றை இந்தியா கடுமையாக மறுத்துள்ளது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தில்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நேட்டோ தலைவர் மார்க் ருட்ட, ஊகத்தின் அடிப்படையில் கவனக்குறைவாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது போன்ற உரையாடல்கள் புதின்-மோடி இடையே நடைபெறவில்லை. அவரின் கருத்துகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை" என்றார்.
இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜெய்ஸ்வால், "இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேவேளையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது.
ஏனெனில் அந்நாட்டிடம் ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் எரிசக்தி வாங்குவதை டிரம்ப் விமர்சித்தார். பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நேட்டோ தலைவர் மிகுந்த பொறுப்போடும், துல்லியமாகவும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
2022 உக்ரைன் போருக்கு பிறகு, ரஷ்யாவின் குறைந்த விலை எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நிதியை ஊக்குவிப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
இந்தியா, தனது 140 கோடி மக்களின் ஆற்றல் பாதுகாப்புக்கு இது அவசியம் என்று வாதிடுகிறது. ஐ.நா. கூட்டத்தின் சூழலில் இந்த மோதல், உலக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் புதிய வரிகள்! மருந்துகளுக்கு 100% வரி! இந்தியா தலையில் இறங்கிய பேரிடி!