ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!
ஈரானின் இத்தகைய செயல்கள் பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி, உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இரு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ‘க்ரூஸ்’ ஏவுகணைகளைப் பயன்படுத்தி தீவிரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு இந்திய உழியர் உயிரிழந்தார். மேலும் ஆறு இந்தியர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடம் ஓமன் தெற்கு நீர்வழிப்பாதையில் உள்ளது. ‘மொம்பசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahiyah) என்ற பெயரிலான இந்தக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்தபோது திடீரென ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின. தாக்குதலில் ஈடுபட்ட ஈரானிய படைகள், கப்பல்களை இலக்கு வைத்து துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இந்திய ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆறு இந்தியர்கள் மற்றும் இரு உக்ரைனியர்கள் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, டெல்லியில் உள்ள ஈரான் துணைத் தூதர் முகமது ஜாவேத் ஹொசைனியை நேரில் அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்தச் சம்மன் மூலம் இந்தியா தனது கடும் அதிருப்தியை ஈரானுக்கு தெரிவித்துள்ளது. இந்தியர்களின் உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்து விரிவான விசாரணை கோரியதோடு, இத்தகைய செயல்கள் தொடராதவாறு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!
இந்தத் தாக்குதல் ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றத்தின் பின்னணியில் நிகழ்ந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஈரான் அதனை ரத்து செய்ததாக அறிவித்து மீண்டும் மோதல் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானின் இத்தகைய செயல்கள் பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்திய அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய ஆதரவு அளிக்கவும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சூழலை கண்காணித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமைதி நிலவ வேண்டும் என்பதும், கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் புதிய மோதல்களைத் தூண்டும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மேலும் தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ”இந்த ரேட் ரொம்ப ஜாஸ்தி...” - அமெரிக்காவை வாண்டடாக வம்பிழுத்த ஈரான்... டிரம்பிற்கு நக்கல் பதிலடி...!