×
 

பெட்ரோல், டீசல் விலை உயரும்! கையை பிசையும் இந்தியா! ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!

ரஷ்யா மற்றும் ஈரானின் கச்சா எண்ணெய் மீதான தடையை விலக்கி கொள்ள அளித்த அவகாசத்தை நீட்டிக்க போவதில்லை என, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை நிலவும் நிலையில், ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அளித்திருந்த தற்காலிக தடை விலக்கை நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியை நம்பியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் அதிக அளவு எண்ணெய் வாங்கி வந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்து, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்திருந்தார். அதன் பின்னர் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்து வந்தது.

இந்நிலையில், மேற்காசியாவில் ஈரான் மீதான போர் தொடங்கியதால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. 

இதையும் படிங்க: மேற்காசியப் போர் எரிபொருள் நெருக்கடியை உருவாக்கும்?! பிரதமர் மோடி கவலை!! தேர்தல் கூட்டத்தில் விவாதம்!

இந்தச் சூழலை சமாளிக்க, அமெரிக்கா கடந்த மாதம் ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு 30 நாட்கள் தடை விலக்கு அளித்தது. இந்த சலுகையின் கீழ், மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடமிருந்து சுமார் 600 லட்சம் பேரல் எண்ணெய் இந்திய நிறுவனங்கள் முன்பதிவு செய்தன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து 40 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

ரஷ்ய எண்ணெய் சலுகை ஏப்ரல் 11ஆம் தேதியுடனும், ஈரான் சலுகை ஏப்ரல் 19ஆம் தேதியுடனும் முடிவடைந்தது. இந்த தடை விலக்கை மேலும் நீட்டிக்கப் போவதில்லை என்று நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் வெள்ளை மாளிகையில் நேற்று அறிவித்தார். இதனால் இந்தியா மீண்டும் வளைகுடா நாடுகளிடமிருந்து அதிக விலையில் எண்ணெய் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், போதுமான கையிருப்பு உள்ளதாகவும், மாற்று நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறது.

உலக சந்தையில் எண்ணெய் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ள நிலையில், இந்த அமெரிக்க முடிவு இந்தியாவின் எரிபொருள் பொருளாதாரத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மக்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! தபால் வாக்கு செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share