சீன ஆக்கிரமிப்பு: ஏன் பயப்படுகிறீர்கள்? நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேச கேள்வி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சீன ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீன எல்லை விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசை நிலைகுலையச் செய்தார். இந்திய நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சரும் நாட்டு மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதையான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி குறித்தக் கட்டுரையை ராகுல் காந்தி அவையில் வாசிக்க முயன்றபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2020-ஆம் ஆண்டு சீனப் படைகள் டேங்குகளுடன் இந்திய எல்லைக்குள் முன்னேறியபோது, இக்கட்டான அந்தச் சூழலில் ராணுவத்திற்கு வழிகாட்டும் கடமையில் இருந்து பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தவறிவிட்டனர். ராணுவத் தளபதியிடம் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். சீன ஆக்கிரமிப்பு குறித்த உண்மைகள் வெளியே வந்தால் பிரதமரின் பிம்பம் சிதைந்துவிடும் என்பதால் தான் அரசு பயப்படுகிறது என ராகுல் சாடினார்.
இதையும் படிங்க: 9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!
ராகுல் காந்தியின் பேச்சிற்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளியிடப்படாத ஒரு புத்தகத்தையோ அல்லது கட்டுரைகளையோ நாடாளுமன்றத்தில் ஆதாரமாக மேற்கோள் காட்ட முடியாது; இது விதிகளுக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர். ஆதாரமில்லாத தகவல்களை அவையில் பேசக்கூடாது எனச் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியும், ராகுல் காந்தி தொடர்ந்து பேச முயன்றதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். நமது நாட்டின் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்துப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் ராணுவ அதிகாரியிடம் என்ன சொன்னார்கள் என நாட்டு மக்கள் அறிய வேண்டும். எனது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் என்னைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! - குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!