மோடியின் இரவு விருந்துக்கு வராத ஜின்பிங்! பரபரப்பை ஏற்படுத்திய சீன அதிபர் முடிவு! ஓட்டலுக்கு திரும்பியது ஏன்?
பிரிக்ஸ் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்காக பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். ஆனால், ஜின்பிங் மட்டும் விருந்தில் கலந்து கொள்ளாமல் ஓட்டலுக்கு சென்றார்.
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அளித்த இரவு விருந்தில் அவர் கலந்து கொள்ளாதது கவனம் பெற்றுள்ளது. மாநாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் ஜின்பிங் ஓட்டலுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அழைப்பு விடுக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜின்பிங் டெல்லி வந்தார். மாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே மோடியும் ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் இரு நாடுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காரா இது… நடமாடும் கோட்டையா? டெல்லியில் வைரலாகும் சீன அதிபர் ஜின்பிங்கின் ‘பாதுகாப்பு கோட்டை’ லிமோசின்!!
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் முக்கியமானது என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பேசிய ஜின்பிங், இந்தியா மற்றும் சீனாவின் தேசிய சூழல்கள் வேறுபட்டிருந்தாலும், இரு நாடுகளும் பொதுவான வளர்ச்சிப் பாதையில் இணைந்து செயல்பட முடியும் என்று குறிப்பிட்டார். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளாக சீனாவும் இந்தியாவும் முக்கியமான பொறுப்புகளை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரிக்ஸ் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்காக பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். ஆனால், ஜின்பிங் மட்டும் விருந்தில் கலந்து கொள்ளாமல் ஓட்டலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஜின்பிங் ஏன் விருந்தில் பங்கேற்கவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணம் உடனடியாக வெளியாகவில்லை. அவர் ஓய்வெடுப்பதற்காக ஓட்டலுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதுவும் இரவு விருந்தில் பங்கேற்காமல் நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால், ஜின்பிங்கின் முடிவு தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்! மோடியுடன் இன்று முக்கிய சந்திப்பு!!