நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பேரிடரில் 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 57 தமிழர்கள், 133 இந்தியர்கள் உட்பட சுமார் 750 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத் பகுதியில் பிரமாண்ட பனிப்பாறை உருகியதையடுத்து அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவு தண்ணீர் நேபாளத்தின் கோஷி ஆற்றில் கலந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம், ஆற்றின் வழித்தடத்தில் இருந்த பாலங்கள், கட்டடங்கள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது.
இந்த திடீர் பேரிடரால் நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய நேபாளத்திற்கு இந்தியா உதவிக்கரம்! 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது 2-வது விமானம்!
இதுகுறித்து நேபாள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நேபாள ராணுவம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிமுரே, சியாப்ருபெசி மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளில் நேபாள ராணுவத்துடன் இணைந்து தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தரைவழியாகவும் சிறப்பு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், ஆற்றின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை மக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம்! காரணம் நிலநடுக்கம் இல்லை! அமெரிக்க ஆய்வு மையம் வெளியிட்ட திடீர் விளக்கம்!