பாடப்புத்தகத்தில் காலிங்கராயன் வரலாறு? முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி!
ஈரோடு காலிங்கராயன் கால்வாய் வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார்.
வெள்ளோட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயன் திருவுருவச் சிலையை முதல்வர் திறந்து வைத்தது வாரிசுதாரர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்காக 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தின் விவசாயத் தந்தை எனக் போற்றப்படும் காலிங்கராயனின் பங்களிப்பைப் போற்றும் வகையில், வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாதுகாப்பு குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
வெள்ளோட்டில் சாலை விரிவாக்கப் பணிகளின் போது அங்கிருந்த காலிங்கராயன் மார்பளவு சிலை அகற்றப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழ் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் நவீன நூலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைப் பாதுகாக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். "காலிங்கராயன் அவர்கள் செய்த அசாத்தியமான பணிகளுக்கு நன்றிக்கடனாகவே இந்தச் சிலையை அமைத்துள்ளோம். இதற்காக முதல்வர் நேரம் ஒதுக்கிச் சிலையைத் திறந்து வைத்தது காலிங்கராயன் வாரிசுதாரர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் தமிழ்நாடுதான்... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!
விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான காலிங்கராயன் வாய்க்கால் புனரமைப்பு குறித்துப் பேசிய அமைச்சர், இதற்காக ₹86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வரும் மார்ச் மாதம் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படும் 45 நாட்களில், போர்க்கால அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ஏற்கனவே பேபி கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர எல்லைக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தாலே வாய்க்கால் பெருமளவு பாதுகாக்கப்படும் என்பதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், காலிங்கராயனின் வரலாற்றுச் சாதனைகளைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். ஜாதி, மத பேதமின்றி அனைத்துக் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், முன்னோடிகளைப் போற்றுவதிலும் திமுக அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்று அமைச்சர் முத்துசாமி தனது பேட்டியில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் வேற, இலக்கியம் வேற! டெல்லிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்.. புதிய செம்மொழி விருதுகள் அறிவிப்பு!