தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான கே.ஜி. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ராஜ், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். தவெக தலைவர் விஜய் ஏன் இன்னும் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை? என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் எப்போது உண்மையான பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கிறாரோ, அதற்கு அடுத்த நாள் எங்கள் தலைவர் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பார் என அதிரடியாகப் பதிலளித்தார். கூட்டணி குறித்த கட்சியின் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்பவர்களோடு மட்டுமே கூட்டணி அமையும். அதேபோல், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கொள்கை சார்ந்த முடிவு, இது யாரையும் கூட்டணிக்கு அழைப்பதற்காகச் சொல்லப்பட்டதல்ல எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: 2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!
அதிமுக-வின் விமர்சனங்களை நாங்கள் கடந்து போகிறோம். ஆனால், திமுக-வின் மக்கள் விரோதச் செயல்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் சொல்வோம். தற்போது நிலவும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்பாகவே உள்ளது. திமுக-விடம் மக்கள் பலம் இல்லை என்று அவர் சாடினார். டிடிவி தினகரன் எழுப்பிய விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், தலைவர் விஜய் அவர்கள் நானும் ஊழல் செய்ய மாட்டேன், என்னுடன் இருப்பவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் எனத் தெளிவாகக் கூறியுள்ளார். அதனை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என உறுதி அளித்தார்.
மதுரை மண்டலக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கோரிக்கைகளைத் தலைவர் விஜய் நேரடியாகக் கண்காணிப்பார் என்றும், மக்களின் முழு ஆதரவுடன் தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அருண்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே சென்னை பனையூரில் முதல் கட்டக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மண்டல வாரியாகக் கருத்து கேட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: 13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!