தமிழ்நாட்டிற்கு நவோதயா பள்ளிகள் ஒருபோதும் தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உடனடியாகச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது என ஒருமனதாகத் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் விரிவான விளக்கமளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது' என்று மாண்பமை உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.
தமிழ்நாடு தனி நாடாக ஒருபோதும் இயங்கவில்லை; மாறாக வரலாற்றுச் சிறப்புமிக்கத் தனித்தன்மையுடன் இயங்குகிறது. இந்தி மொழித் திணிப்புதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உயர்ந்த தத்துவத்தை மதித்து, அந்தந்த மாநிலங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்றும்.. இன்றும்.. என்றும்..! தமிழ்நாட்டை ஆள்வது அண்ணா தான்..! உதயநிதி பெருமிதம்.!
தமிழர்களின் நாட்டுப்பற்றையும் சாதனைகளையும் சுட்டிக்காட்டிய அவர், இந்திய-சீனப் போர், வங்கதேச விடுதலைப் போர், கார்கில் போர் மற்றும் குஜராத் நிலநடுக்கம் என நாடு சந்தித்த இக்கட்டான பேரிடர் காலங்கள் அனைத்திலும் தமிழர்கள் தங்களின் ஈடு இணையற்ற நாட்டுப்பற்றை மற்ற மாநிலத்தவர்களை விடக் குறையாமல் நிரூபித்துள்ளனர். இந்தி மொழியைத் திணிக்காதே என்று உரிமைக்குரல் எழுப்புவதால் மட்டுமே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாகக் கருத முடியாது.

இந்தி கற்பதற்கும் நாட்டுப்பற்றுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அறிஞர் அண்ணா வழங்கிச் சென்ற இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான் இன்று நாட்டிலேயே உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடத்திலும், தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணியாற்றும் முன்னோடி மாநிலமாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி இன்ஜினாகவும் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி விஞ்ஞானிகள் வரை இந்தி தெரியாமலேயே உலக அரங்கில் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நவோதயா பள்ளிகளுக்கான அவசியம் குறித்துப் பேசிய அவர், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (பொதுப்பட்டியல்) இருப்பதால் மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் என்ற உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இங்குப் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் வென்று முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்றனர். எனவே நவோதயா பள்ளிகளுக்குத் தனியாக நிலம் ஒதுக்க வேண்டிய தேவையில்லை. மாறாக அப்பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை மாநில அரசிடம் வழங்கினால் எங்களின் கட்டமைப்பைக் கொண்டே இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி கல்வி நிதியை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது என்று சாடினார்.
தொடர்ந்து தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்துக் குறிப்பிட்ட உதயநிதி, உச்சநீதிமன்றத்தில் புதிய அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி நவோதயா பள்ளிகள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிலைப்பாட்டில் அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருக்க வேண்டும்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பேரறிஞர் அண்ணா விதைத்த இருமொழிக் கொள்கையைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும்; மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!