மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன. காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஒரே நாளில் மட்டும் இஸ்ரேல் குண்டு வீச்சில் காசாவில் 60 பேர் மரணம் அடைந்தனர். 20 மாதங்களாக நடக்கும் போரில் இதுவரை 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து போரால் காசா மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் கோரி ஐநா தீர்மானம் கொண்டு வந்தது. அதனை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முடக்கியது.
இதையும் படிங்க: நிலைமை சரியில்லை! ஈரானுக்கு போகாதீங்க! சொந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வார்னிங் மெசேஜ்!

சர்வதேச நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால், காசாவில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ''60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காசாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இது குறித்து, அமெரிக்காவிலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வருகை. மீதமுள்ள பிணைக்கைதிகளை மீட்டெடுக்கவும், ஹமாஸின் ராணுவ கட்டமைப்பை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போது 60 நாள் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக, உயிருடன் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இறந்த பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். இந்த போர் நிறுத்தத்தின் தொடக்கத்தில், போருக்கு நிரந்தர முடிவு கட்டுவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம். ஆனால், காசா மற்றும் ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு முழுமையாக ராணுவமயமாக்கல் உட்பட, இஸ்ரேலின் குறைந்தபட்ச நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். போர்நிறுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், காசாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறோம். ராணுவத்தின் முழு பலத்தை காட்டுவோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகப் பெரிய சாதனைகளைப் பெற்றுள்ளோம். ராஜதந்திரம் வேலை செய்யவில்லை என்றால் ராணுவ பலத்தின் மூலம் செயல்பட விரும்புகிறோம். போராளிகளின் துணிச்சலுக்கு நன்றி. ஹமாஸின் பெரும்பாலான ராணுவ திறன்களை நாங்கள் தகர்த்துவிட்டோம் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: காசாவில் போர் நிறுத்தமா? பாலஸ்தீனத்திற்கு தனிநாடா? விருந்து அளித்த ட்ரம்பிடமே கறார் காட்டிய நெதன்யாகு!