ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தப் பேச்சுகளில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானிடம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு கட்டாய நிபந்தனையை விதித்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் அமைதி ஏற்பட வேண்டுமானால், பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கிய முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பிக்கும் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணைய வேண்டும் என்பது அந்தக் கோரிக்கை.
ஆனால், இந்த முயற்சிக்கு பாகிஸ்தான் திட்டவட்டமான மறுப்புத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், “நம் அடிப்படை கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முரணான எந்த உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் ஒருபோதும் இணையாது. இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது” என தெளிவாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவின் கண்டிசனை ஏற்கவிட்டால்..?! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை! போர் பதற்றம்!
சமா டிவியில் பேசிய அவர், “ஒரு நாள்கூட தன் வார்த்தையைக் காப்பாற்றாத, நம்பகத்தன்மையற்றவர்களுடன் எப்படி ஒரே மேசையில் அமர்ந்து பேச முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். பாலஸ்தீன விடுதலை கிடைக்கும் வரை இஸ்ரேலுடன் எவ்வித உறவும் இல்லை என்பது பாகிஸ்தானின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.

2020ஆம் ஆண்டு டிரம்பின் முதல் ஆட்சியில் அமெரிக்கா முன்னெடுத்த இந்த ஒப்பந்தம், இஸ்ரேலுடன் இஸ்லாமிய நாடுகள் அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே இணைந்துள்ளன. ஆனால், பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் பாலஸ்தீன விவகாரத்தில் உறுதியான தீர்வு வரும் வரை இணைய மாட்டோம் என மறுத்து வருகின்றன.
சவுதி அரேபியாவும் இதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. “பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு அமைப்பதற்கான நிரந்தர மற்றும் மாற்ற முடியாத பாதை உருவாக்கப்பட வேண்டும். அதுவரை இஸ்ரேலுடன் எந்த உறவும் கிடையாது” என சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் அமைதிப் பேச்சுகளில் முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான், டிரம்பின் இந்த அழுத்தத்தை நிராகரித்துள்ளது. இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்குள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மறுபுறம், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை தொடரும் நிலையில், மேற்காசிய அரசியலில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தன் கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உலகம் உற்று நோக்கி வருகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!