சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தடைந்தார். அவர் முதலில் தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள், கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பு இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளான கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: திமுகவை எதிர்க்க பாஜக முக்கியம்! அதிமுகவிடம் கறார்! முக்கிய தொகுதிகளை கேட்டுப்பெற திட்டம்!
இந்த ஆலோசனையில் தொகுதிப் பங்கீடு குறித்த உத்திகள், பாஜகவுடன் எவ்வளவு தொகுதிகளை விட்டுக்கொடுக்கலாம் என்பது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தகவல்களின்படி, பியூஷ் கோயல் இன்றைய பேச்சுவார்த்தையில் அதிமுகவிடம் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்க உள்ளார். தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக மொத்தம் 70 தொகுதிகள் வரை கோர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், பேச்சுவார்த்தை முடிந்த பிறகே இறுதி முடிவு தெரியவரும். கடந்த முறை 2021 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், இம்முறை தொகுதிப் பங்கீட்டில் கவனமாக இருக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்” என்று திறந்த அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதனால், பாஜகவுடனான கூட்டணி மட்டுமே உறுதியாக உள்ளது. தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் நைனார்!! அமித் ஷாவுடன் ஆலோசனை! சென்னை திரும்பியதும் காத்திருக்கும் ட்விஸ்ட்!