இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர உள்ளார். மாலத்தீவு சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, ரூ.4500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் விழாவுக்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி விழா நிறைவுற்றதும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசினர் விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர் மறுநாள் 27ம் தேதி (ஞாயிறு) ஹெலிகாப்டரில் காலை 11.10 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
மதியம் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு தான் கொண்டு வந்துள்ள கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார். பின்னர் விழா நடைபெறும் இடத்துக்கு வரும் அவர், அங்கு தொல்லியல் துறையால் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் பிற்பகல் 2.15 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதையும் படிங்க: நாளை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ஹெலிபேட் இடமாற்றம்:
பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாலப்பர் கோவில் இடத்திற்கு பதிலாக பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட் அருகே உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளதால் விமானியின் அறிவுரையின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு:
தூத்துக்குடிக்கு பிரதமரின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, நெல்லை நகரம், குமரி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விழா மேடையில் இருந்து மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாலத்தீவில் பிரதமர் மோடி.. Guard of Honour மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!