டில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானம் இன்று தேசபக்தி முழக்கங்களால் அதிர்ந்தது. சுதந்திர போராட்டத்தின் உன்னத கீதமான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறப்பு தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர், "நவம்பர் 7 இந்திய மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இப்பாடல் ஒவ்வொரு தலைமுறையையும் தேசபக்தியால் தூண்டும்" என்று உருக்கமாகப் பேசினார்.
1875 நவம்பர் 7 அன்று, அட்சய நவமி தினத்தில் வங்கத்தின் மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி இப்பாடலை எழுதினார். 'ஆனந்த மடம்' நாவலில் இடம்பெற்ற இக்கீதம், சுதந்திர போரில் இந்தியர்களின் போர்க்குரலாக ஒலித்தது. இப்போது 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்நாளை, மத்திய கலாசார அமைச்சகம் ஓராண்டு திருவிழாவாக அறிவித்துள்ளது. இன்று முதல் 2026 நவம்பர் 7 வரை நாடு முழுவதும் இசை, கலை, நாடக நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கும்.
முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 14 வரை டில்லியில் தொடங்குகிறது. இரண்டாவது கட்டம் 2026 ஜனவரி 19-26 குடியரசு தின வாரம். மூன்றாவது கட்டம் ஆகஸ்ட் 7-15 சுதந்திர தின வாரம். இறுதிக் கட்டம் 2026 நவம்பர் 1-7 இல் உச்சக்கட்ட இசை விழாவுடன் முடியும். நாடெங்கும் பள்ளிகள், கல்லூரிகள், கலைக்குழுக்கள் என அனைத்து தரப்பும் இதில் பங்கேற்க உள்ளன.
இதையும் படிங்க: என்ன பகல் கனவா? எந்தக் கொம்பன் நினைச்சாலும் திமுகவை அசைக்க முடியாது... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்...!

நிகழ்ச்சியில் 'வந்தே மாதரம்' பாடல் பல்வேறு மொழிகளில் ஒலித்தது. பிரதமர் மோடி சமூக வலைதளத்தில், "இப்பாடல் இந்தியாவின் ஆன்மாவின் குரல். 150 ஆண்டுகளாக இளைஞர்களை தேசத்திற்காக எழச் செய்கிறது" என்று பதிவிட்டார். இந்த விழா, இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவூட்டும் பெரும் பாலமாக அமையும் என நம்பப்படுகிறது.
வந்தே மாதரம் என்றால் மண்ணின் மீது அன்பு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் இரத்தத்திலும் ஓடும் தேசப்பற்று. இந்த 150வது ஆண்டு, அந்த உணர்வை மீண்டும் தட்டி எழுப்பும் என்பதில் ஐயமில்லை!
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய ட்ரம்ப்!! அமெரிக்கா ஏவுகணை சோதனை வெற்றி!! அணு ஆயுதம் போரின் துவக்கமா?