சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சித் தலைவராக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை ராமதாஸே எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கியதையும் கூட்டம் அங்கீகரித்தது.
கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கி, அந்தப் பொறுப்புக்கு ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்தது.
இதையும் படிங்க: பச்சை துரோகம் செய்த அன்புமணி! ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! ஸ்ரீகாந்தி கொந்தளிப்பு!
பசுமைத் தாயகம் பாமகவின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படும் தன்னார்வ அமைப்பு ஆகும். இது தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஆலோசனை அந்தஸ்து பெற்ற அமைப்பு இது.

பாமகவில் நீண்டகாலமாக நிலவும் உட்கட்சி மோதல் இக்கூட்டத்தில் மேலும் தெளிவாக வெளிப்பட்டது. ராமதாஸ் தரப்பு அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணியை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாந்திமதி ஏற்கெனவே பாமக செயல் தலைவராக உள்ள நிலையில், பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் கூட்டத்துக்கு வந்தபோது, “கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” என்று கூறினார். கூட்டத்தில் அது நிறைவேறியது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமகவை ராமதாஸ் தரப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது தெளிவாகியுள்ளது.
இக்கூட்டம் பாமகவின் எதிர்கால போக்கையும் கூட்டணி வியூகங்களையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அன்புமணியை தொடர்ந்து விமர்சிக்கும் ஜி.கே.மணி!! திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ பதவி பெற திட்டம்!