அதிமுகவில் உள்ளடி வேலை பார்க்கும் மா.செ-க்கள்!! 50 தொகுதிகளில் வெற்றி எட்டாக்கனி! இபிஎஸ் கலக்கம்!
தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காத அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், தேர்தல் பணிகளை துவக்காமல் உள்ளதால், 50 தொகுதிகளில் வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சீட் கிடைக்காத பல மாவட்ட செயலர்கள் தேர்தல் பணிகளைத் தொடங்காமல் உள்ளதால், கூட்டணியின் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது சவாலாக மாறியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மூன்று கட்ட வேட்பாளர் பட்டியல்களிலும் 16 மாவட்ட செயலர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர் தூசி மோகன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அக்கட்சி வேட்பாளராக மாறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலர் முனியசாமி தன் மனைவி கீர்த்திகாவுக்கு திருவாடானை தொகுதியைப் பெற தன் சீட்டை தியாகம் செய்தார்.
மீதமுள்ள மாவட்ட செயலர்களில் பலர் தேர்தல் பணிகளைச் செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலர் அலெக்சாண்டர் அம்பத்தூரிலும், நீலகிரி மாவட்ட செயலர் ஊட்டியிலும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் மகேந்திரன் மடத்துக்குளத்திலும் சீட் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.
இதையும் படிங்க: இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் விருதுநகர் அல்லது திருச்சுழி தொகுதியை எதிர்பார்த்தார். அதையும் வேறு ஒருவருக்கு பழனிசாமி ஒதுக்கினார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் ஜெயசுதர்சனுக்கு குமரி தொகுதியைத் தவிர மற்றவை கூட்டணிக்குப் போனதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் இம்முறையும் சீட் இல்லாமல் தேர்தல் பணியை மட்டும் கவனிக்கச் சொல்லப்பட்டுள்ளார்.
இந்த மாவட்ட செயலர்கள் பலவீனமானவர்கள் என்று கருதி சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல கோடி ரூபாய் செலவு செய்து கட்சிக்காக உழைத்ததாகவும், இப்போது அந்த உழைப்புக்கு மரியாதை இல்லை என்றும் அதிருப்தி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரச் செயலர் பாபு உள்ளிட்ட சிலர் ஏற்கெனவே கட்சியிலிருந்து விலகும் நிலையில் உள்ளனர்.
மாவட்ட செயலர்கள் கட்சியிலிருந்தபடியே வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் பழனிசாமி எச்சரித்தும் பலன் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 50 தொகுதிகளில் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கவலை தெரிவித்தனர்.
இந்த சூழலில், சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்க தொகுதி பொறுப்பாளர்களை பழனிசாமி நியமித்துள்ளார். 154 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பொன்னேரிக்கும், சேவூர் ராமசந்திரன் ஆற்காட்டுக்கும், வடசென்னை வடமேற்கு மாவட்ட செயலர் மோகன் கொளத்தூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் புறநகர் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிருப்தி அதிமுகவின் தேர்தல் உத்தியை பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்த பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டாலும், தரைமட்ட நிர்வாகிகளின் அதிருப்தி தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கான தொகுதிகள் கிடைக்கல!! கோவத்தில் கொந்தளித்த கோயல்!! கைவிரித்த எடப்பாடி!