2 நாள்ல முடிவ சொல்லுங்க!! பிரேமலதாவுக்கு செக் வைக்கும் பழனிசாமி! தேமுதிக யோசனை!
'இரண்டு நாட்களில் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் கெடு விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு "இரண்டு நாட்களுக்குள் கூட்டணி முடிவை அறிவிக்க வேண்டும்" என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவர்கள் அனைவரும் மேடையில் இணைய வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கூட்டணி இறுதி செய்யும் பணிகளை விரைவுபடுத்த அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தே.மு.தி.க.வை என்டிஏ-வில் இணைக்க அதிமுக தரப்பு பல கட்ட ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்க ஓகே சொன்ன அதிமுக, தற்போது 10 தொகுதிகள் வரை தர தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது! கூட்டணி ரகசியத்தை உடைக்காத பிரேமலதா!
ஆனால், தே.மு.தி.க. தரப்பில் 21 தொகுதிகள் + ராஜ்யசபா எம்பி பதவி + தேர்தல் செலவுக்கு உதவி என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட் தற்போது தர முடியாது என அதிமுக திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதேசமயம், தி.மு.க. தரப்பிலும் தே.மு.தி.க.வுடன் பேச்சு நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மூலம் தி.மு.க. கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடக்கிறது. தி.மு.க. தரப்பில் 7 தொகுதிகள் மட்டுமே தர முன்வந்துள்ளது; ராஜ்யசபா பதவி குறித்து எந்த உறுதியும் இல்லை. இரு அணிகளுடனும் சம்பிரதாயமாக பேசி வரும் பிரேமலதாவின் அணுகுமுறை அதிமுக தரப்பில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வருகைக்கு முன்பாகவே கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவு சொல்ல வேண்டும் என பிரேமலதாவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தே.மு.தி.க. இப்போது எந்த அணியுடன் இணையப் போகிறது? பிரேமலதா பழனிசாமி கெடுவுக்கு பணிந்து அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருவாரா? அல்லது தி.மு.க. அணியை நோக்கி திரும்புவாரா? அல்லது தனித்து போட்டியிடுவாரா? என எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இதையும் படிங்க: "யார் கூட கைக்கோர்க்கப் போறாங்க?" இன்னைக்கு தெரியப்போகுது தேமுதிக-வோட 'மெகா கூட்டணி' அறிவிப்பு!