×
 

அமைச்சர் பதவி கிடைக்காததால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அப்செட்!! உற்சாக கீதம் பாடும் எடப்பாடியார் தரப்பு!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால், அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

முன்னாள் அமைச்சர்கள் சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையிலான இந்த அணியினர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு கிடைத்த ‘பரிசு’ இதுதான் என ஏமாற்றத்தில் உள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட அ.தி.மு.க., 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து ஆட்சியமைக்க உதவியது. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஒன்று திரண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க.வுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதன் மூலம் தலா ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என ஐந்து அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் மா.செ கூட்டத்தை கூட்டும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை முந்திக்கொள்ள திட்டம்!

ஆனால், நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் சண்முகம்-வேலுமணி அணியினருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இது அவர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அதை எப்படி திருப்பிப் பெறப் போகிறோம் என்பது குறித்து கவலைப்படுவதாகவும் சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் சிலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

“அமைச்சர் பதவி அல்லது வாரியத் தலைவர் பதவியாவது கிடைக்கும் என நம்பித்தான் பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டோம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது வெறும் எம்.எல்.ஏ.க்களாக இருந்து என்ன செய்வது?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இந்நிலையில், பல எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பழனிசாமி தரப்புக்கு திரும்ப தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் பதவிகளை இழக்கும் அபாயமும் அவர்களுக்கு உள்ளது. 

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்தச் சூழலை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தால், சண்முகம் அணியால் தனிக் குழுவாகக் கூட செயல்பட முடியாது என்பது அரசியல் வட்டார மதிப்பீடு. 

இந்த உள்கட்சி நெருக்கடி அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share