அண்ணாமலை விலகியதின் அதிர்ச்சி பின்னணி! பாஜகவில் மாற்றம் வரும்! அடித்து சொல்லும் நிர்வாகிகள்!
தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம், 234 தொகுதிகளுக்கும் தலைவர்களை பொறுப்பாளர்களாக நியமித்தார். இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா போன்றோர் இடம்பெற்றனர்.
ஒவ்வொரு பொறுப்பாளரும் 2 முதல் 7 தொகுதிகள் வரை பொறுப்பேற்றனர். அண்ணாமலைக்கு விருகம்பாக்கம், சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதையும் படிங்க: தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!
ஒவ்வொரு பொறுப்பாளரும் தங்கள் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு நாட்கள் தங்கி பிரசாரம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு ஹிந்து அமைப்புகள், இளைஞர்கள், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவரது பிரசாரம் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என்று கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் நம்பினர்.
ஆனால், நேற்று அண்ணாமலை திடீரென விலகல் அறிவிப்பை வெளியிட்டார். தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனிக்க வேண்டிய கடமை உள்ளது என்று கூறினார். இதனால் ஆறு தொகுதிகளுக்கான பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த விஷயத்தை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஏற்கனவே கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திடீர் விலகல் பாஜகவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அண்ணாமலை இதை பொதுவெளியில் அறிவித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுவது: அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினார். ஆனால் ஆறு தொகுதிகளுடன் மட்டும் முடக்கப்பட்டதால் அதிருப்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும், பல பொறுப்பாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் நியமனம் செய்யப்பட்டது, தொகுதிகள் தொலைவாக ஒதுக்கப்பட்டது (சென்னை ஒன்று, தென் மாவட்டம் ஒன்று) போன்றவை காரணமாக உள்ளன. எச்.ராஜா உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், பொறுப்பாளர்கள் பட்டியலை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் திமுகவினர் இதை தங்கள் சாதகமாக பயன்படுத்தி, கூட்டணியில் பிளவு போல் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக - அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் போது இந்த சலசலப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஆரம்பித்து வைத்த கோஷம்!! காங்., விடாப்பிடி! திமுக, கனிமொழியிடம் ராகுல்காந்தி பேரம்!!