ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!
தவெக ஆர்ப்பாட்டத்தின்போது சேதமடைந்த சாலை தடுப்பு கம்பிகளை சரி செய்து தர அனுமதி தருமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் அக்கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர், நிகிதா என்ற பெண் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவலர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். சாரி வேண்டாம் நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விஜயை காண்பதற்காக காலை முதலே சிவானந்தா சாலையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். போராட்டத்திற்கு விஜய் வருகை தந்த போது அவரை காண்பதற்காக முண்டியடித்ததாக தெரிகிறது. அப்போது சாலை நடுவே இருந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பைப்புகள் மீது தொண்டர்கள் ஏறியதில், அனைத்தும் சேதம் அடைந்து சாலையில் உடைந்து கிடந்தது. மேலும் விஜய காணும் ஆர்வத்தில் சாலையின் நடுவில் இருந்த செடிகளையும் நாசமாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக கொடி கலர் படகுகளுக்கு மானியம் இல்லையா..? மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம்..!
மேலும் பேரி கார்டுகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. போராட்டம் முடிந்த பிறகு சிவானந்த சாலையை உருக்குலைந்து காணப்பட்டது. போராட்டத்திற்கு வருகை தந்தவர்கள் இதுபோல நடந்து கொள்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிவானந்தா சாலையில் பொது சொத்துக்கள் சேதாரம் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
சேதத்திற்கு உரிய நஷ்ட ஈடு தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொது சொத்துக்கள் சேதம் தொடர்பாக விஜய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய மாநகராட்சி அதிகாரிகள், என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என ஆய்வு செய்தனர்.
இந்த விவகாரம் தலைவர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதும், அவர் கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று கூறிய அவர், சேதமடைந்த தடுப்புகளைச் சரிசெய்வதற்கான முழு செலவையும் உடனடியாகக் கட்சியே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து, தவெகவின் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஏ.சி. குமரவேல், சென்னை மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “போராட்டத்தின் போது சேதமடைந்த தடுப்புகளைச் சரிசெய்ய ஆகும் செலவு அல்லது புதிய தடுப்புகளை வாங்குவதற்கான செலவுத்தொகையைத் தெரிவித்தால், அதை உடனடியாக வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காசு இல்ல.. மக்களோட பணம்.. சீறிய விஜய்..!