திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புது புகைச்சல்: தளபதி vs ஜோதிமணி!! சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்!
காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. தளபதி தெரிவித்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது என்று பேசப்படும் நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே மீண்டும் பெரிய சலசலப்பு எழுந்துள்ளது. இம்முறை மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசிய ஒரு பொதுக்கூட்ட உரை தான் தீப்பற்ற வைத்திருக்கிறது.
மதுரையில் நகர் திமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் பேசிய தளபதி, காங்கிரஸ் எம்பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரை நேரடியாக விமர்சித்தார். “எப்படியோ எம்பியாகிவிட்டார்கள். இப்போது எல்லாவற்றிலும் பங்கு வேண்டும் என்கிறார்கள். காங்கிரஸ்க்கு மூவாயிரம் ஓட்டுகள் தான் உள்ளன. பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை” என்று கடுமையாக சாடினார்.
மேலும், “அடுத்த மக்களவைத் தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. திமுக இல்லையென்றால் இந்தியா கூட்டணியே இல்லை. ஸ்டாலின், மம்தா, அகிலேஷ் போன்றவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள்” என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ஆசை காட்டும் திமுக!! அசாம் தேர்தல் செலவை ஏற்பதாக பேரம்!! கூட்டணியை காப்பாற்ற தகிடுதத்தோம்!
இந்தப் பேச்சுக்கு உடனடியாக கரூர் எம்பி ஜோதிமணி கடும் பதிலடி கொடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் எழுதியிருப்பது: “திமுக எம்எல்ஏ திரு.கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றி பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன?
காங்கிரஸில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல் காந்தி முடிவு செய்வார். உங்களிடம் ஆலோசனை கேட்க யாரும் வரவில்லை. காங்கிரஸை தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
களப்பணியில் நெருக்கடிகள் இருந்தாலும், கூட்டணி தர்மத்துக்காகவும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் அமைதி காக்கிறோம். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை கடைபிடியுங்கள். முதலமைச்சரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள்.”
இதேபோல் மாணிக்கம் தாகூரும் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக பதிலடி கொடுத்தார். “மதுரை வடக்கில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானத்தை காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகாரத் திமிருடன் இருந்தால் தோழமைக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று எச்சரித்தார்.
இந்த மோதலின் பின்னணி மதுரை வடக்கு தொகுதி தான். தற்போது தளபதி எம்எல்ஏவாக இருக்கும் இத்தொகுதியை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு தளபதி எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இந்த ஆவேசப் பேச்சு என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இரு தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், கூட்டணி தொடரும் என்று திமுக - காங்கிரஸ் தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் இப்போதே பெரிய சண்டை நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இந்த புகைச்சல் எப்படி தணியும் என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல்காந்தி!! கூட்டணிக்குள் குளறுபடி!! திமுக மேலிடங்கள் அதிர்ச்சி!