“பனையூர் பண்ணையாரே.. ஆகப்பெரும் ஊழல்வாதி நீங்கள்தான்!” விஜய்க்கு அதிமுக கடும் பதிலடி!
மாமல்லபுரம் தவெக கூட்டத்தில் அதிமுகவை 'ஊழல் கட்சி' என விமர்சித்த விஜய்க்கு, பனையூர் பண்ணையார் எனத் தலைப்பிட்டு அதிமுகவினர் மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளனர்.
காபலிபுரத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்வீரர் கூட்டத்தில் அதிமுகவை 'ஊழல் கட்சி' என விமர்சித்த நடிகர் விஜய்க்கு, அதிமுக தலைமை மிகக் கடுமையான மற்றும் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. "பனையூர் பண்ணையார்" எனத் தலைப்பிட்டு அதிமுக வெளியிட்டுள்ள இந்த விமர்சனம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் ஊழல் புகாருக்குப் பதிலளித்துள்ள அதிமுக, "சட்டவிரோதமாகத் தொடர்ந்து பிளாக்கில் டிக்கெட் விற்றுப் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி" என நேரடியாகச் சாடியுள்ளது. மேலும், கரூரில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்க்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக, "அந்தச் சம்பவத்தில் வழக்கு வருமோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கிய வீரர்தானே நீங்கள்?" என விஜய்யின் கடந்த கால நிகழ்வுகளைக் கிளறி விமர்சித்துள்ளது.
அதிகார மையத்திடம் மண்டியிட்டது யார்? பாஜகவிற்கு அதிமுக அடிமை என்ற விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள அந்த இயக்கம், மத்திய அரசிற்கு அடிமை என்பது அதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று; தமிழக உரிமைகளைப் போராடிப் பெற்று, மக்களின் நலன்களுக்காக வாதாடிய இயக்கம் எங்களுடையது எனத் தெரிவித்துள்ளது. ஊழல் என்பது அரசியலில் ஏமாற்றிச் சம்பாதிப்பது மட்டுமல்ல, 'Undue Influence' மூலம் வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் ஊழல்தான் என விஜய்யைத் தாக்கிப் பேசியுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! - நிர்வாகிகளுடன் விஜய் நடத்தும் மகாபலிபுரம் ரகசியக் கூட்டம்
விஜய்யின் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய அதிமுக, "அதிமுகவை ஊழல் ஆட்சி எனக் கூறிவிட்டு, அதில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை அருகே வைத்திருப்பதுதான் விஜய் கூறும் தூய சக்தியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், விஜய்யின் சினிமாப் பிரச்சனைகளின்போது அவர் பட்ட கஷ்டங்களை நினைவுபடுத்திய அதிமுக, "அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா? அல்லது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சரின் பெயரை நீங்கள் சொல்கிறீர்களா?" என விஜய்க்குப் பகிரங்கமான சவாலை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: “விசில் ஊழலை ஒழிக்கும் சின்னம்!” தொண்டர்களை உற்சாகப்படுத்திய தளபதி விஜய்!