டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!
தமிழக அரசின் நிதியுதவியுடன், டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளூவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.
சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவரது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் என்பதால் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது, தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி, மாநிலத்துக்கு வர வேண்டிய நிதிப் பங்கீடு மற்றும் நிலுவைத் தொகைகளை விரைவாக விடுவிக்கக் கோரி மனு ஒன்றை முதலமைச்சர் நேரடியாக அளிக்க உள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி கிடைக்காததால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அப்செட்!! உற்சாக கீதம் பாடும் எடப்பாடியார் தரப்பு!
மத்திய அரசு தலைவர்களை சந்தித்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்காலக் கூட்டணி தொடர்பான விவகாரங்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கும் அறை, ஆலோசனைக் கூடங்கள் உள்ளிட்ட இடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. தமிழர் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரின் முதல் டெல்லி பயணம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மத்திய-மாநில உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பயண அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: மீண்டும் மா.செ கூட்டத்தை கூட்டும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை முந்திக்கொள்ள திட்டம்!