பார்லி.,-யை கைப்பற்ற திட்டமிடும் பாஜக! ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் - கார்கே சூளுரை!
மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த மசோதாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய 3 நாள் சிறப்பு அமர்வில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா ஆகிய மூன்றும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்!! வதந்திங்களை பரப்பாதீங்க! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டிப்பு!
கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்: “மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றன. மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் குறைபாடுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்களால் நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது. நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். நமது ஜனநாயகத்தின் மீதான இந்த வஞ்சகமான தாக்குதலை எங்களின் முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவோம்.”
எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். தொகுதி மறுவரையறை (டெலிமிடேஷன்) மசோதா நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்டவற்றின் லோக்சபா இடங்கள் கணிசமாகக் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியை சூடாக்கிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! பார்லி.,யில் நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு!