காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!
தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்களிடம், தி.மு.க., குதிரை பேரம் நடத்த வழி வகுத்துள்ளது என தமிழக காங்கிரசார் புலம்புகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஆட்சியில் பங்கு இல்லையென்றால் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என அவர் கூறியது, தி.மு.க.வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் பங்கு கோரிய காங்கிரஸ், தி.மு.க. அதை நிராகரித்த நிலையில் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிந்த பிறகும் கிரீஷ் ஷோடங்கர் டெல்லியில் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும். நடுநிலை இல்லை” என மிரட்டும் தொனியில் பேசினார். இந்த பேச்சு தி.மு.க. தலைமையை உஷார்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றுக்கு தி.மு.க.வே தேர்தல் செலவுகளை ஏற்றது. இந்த நிலையில், தி.மு.க. காங்கிரஸ் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையினரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யும் என அஞ்சப்படுகிறது. “குதிரை பேரம்” நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் பெண் சபாநாயகர் உறுதி!! மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
இதனிடையே தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததாவது, “கிரீஷ் ஷோடங்கர் தமிழக காங்கிரஸை ‘வாட்ச்’ செய்ய வந்துள்ளார். வாட்ச்மேனாக மாறக் கூடாது. ஆட்சியில் பங்கு குறித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, செல்வப்பெருந்தகை போன்றோர் பேசலாம். ஆனால் தேர்தல் முடிவுக்கு முன்பே இப்படி பேச வேண்டிய அவசியமில்லை. கூட்டணி ஒப்பந்தத்தில் ஆட்சிப் பங்கு குறித்து எதுவும் கையெழுத்திடப்படவில்லை” என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மே தின நிகழ்ச்சியில் பேசுகையில், “கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு. தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆட்சிப் பங்கு குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசலாம்” என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ்-தி.மு.க. இடையே புதிய பரபரப்பு உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!