திருப்பி அடிக்கவும் தெரியும்!! மாணிக்கம் தாகூர் பேச்சால் சர்ச்சை! ஒன்றிணையும் திமுக நிர்வாகிகள்!
காங்கிரஸ்காரனுக்கு வந்தே மாதரம், ஜே மட்டும் தான் சொல்லத் தெரியும்னு கிடையாது திருப்பி அடிக்கவும் தெரியும்' என்ற காங்., எம்.பி., மாணிக்கம்தாகூரின் தடித்த வார்த்தைகளால் தி.மு.க., எரிச்சலடைந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த கனிமொழி, கூட்டணி உறுதியானதாக தி.மு.க. தரப்பில் கூறப்பட்டாலும், காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை உறுதியான அறிவிப்பு இல்லை.
மாறாக, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் 'ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்' என்று கடுமையாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரையில் நடந்த சர்ச்சை பேச்சு இரு கட்சிகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் எம்.கே. ஸ்டாலின் நேற்று மதியம் மதுரை வந்தடைந்தார். அதே நேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் ஒட்டிய 'ஜெய்' போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: திமுகவுக்கு அதிகார மமதை! சும்மா விட முடியாது! எங்களுக்கு திருப்பி அடிக்க தெரியும்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!
இதுகுறித்து பேசிய சிவகங்கை எம்.பி. மாணிக்கம் தாகூர், "காங்கிரஸ்காரர்கள் வந்தே மாதரம், ஜே மட்டும் சொல்லுவாங்கனு கிடையாது. திருப்பி அடிக்கத் தெரியும்" என்று கடுமையான வார்த்தைகளில் பேசினார். "தன்மானம் உள்ள இளைஞர்கள் அந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன்" என்றும் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வந்த இறங்கியபோது இந்த பேட்டி வெளியானது தி.மு.க.வினரை கொந்தளிப்படையச் செய்தது. கூட்டணி நட்புக்கு எதிரான இந்த சீண்டல் பேச்சு தி.மு.க.வினரை ஒருங்கிணைத்துள்ளது. "இரு கட்சி தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். ஆனால் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்துகிறார். காங்கிரஸ் தலைமை அவரை கண்டிக்க வேண்டும்" என்று தி.மு.க.வினர் கோரியுள்ளனர்.
"இதுபோன்ற மோதல்கள் கூட்டணி வெற்றியை பாதிக்கும். எங்களுக்கும் பேசத் தெரியும். ஆனால் முதல்வருக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது என்பதால் அடக்கி வாசிக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுரையில் தங்கிய ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோருடன் தனியாக பேசினார்.
தளபதி பேச்சு விவகாரம், மாணிக்கம் தாகூர் சர்ச்சை, மாநகராட்சி மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டணி இறுதியாகும் நிலையில் இதுபோன்ற சர்ச்சைகள் தி.மு.க.வுக்கு தலைவலியாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புது புகைச்சல்: தளபதி vs ஜோதிமணி!! சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்!