தமிழகத்திற்குள் புகுத்தக்கூடாது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் நேரடி வார்னிங்... என்னவா இருக்கும்?
இச்சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது; இதற்கான விதிகளை உருவாக்கும் போது அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு பொருத்தமற்றது எனவும், கிண்டியில் 160 ஏக்கர் இருக்கிறது, பொருத்தமான இடத்தை பரிசீலிக்கலாம் என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
கோவை பீளமேடு பகுதியில் புனரமைக்கப்பட்ட மறைந்த மூத்த தலைவர் தோழர் கே.ரமணி நினைவு இல்லம் மற்றும் தோழர் கே.தங்கவேலுவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு பின்னர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொழிலாளர்களின் உரிமைகள் மீண்டும் பறிக்கப்படும் சூழல் நிலவுவது வேதனைக்குரியது எனவும், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் தொழிலாளர்களின் நூறாண்டு கால உரிமைகளைப் பறிப்பதாக உள்ளன.
இதையும் படிங்க: ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை! சகிக்க முடியவில்லை! திமுகவின் பேச்சுக்கு எதிராக சண்முகம் கொந்தளிப்பு!!
இச்சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது; இதற்கான விதிகளை உருவாக்கும் போது அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜயிடம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். தொழிலாளர் விரோத நடைமுறைகளை தமிழகத்தில் புகுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கட்சியின் மாநிலக் குழு கூடி எடுத்த முடிவின்படி, விரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர் மறைவினால் தான் இடைத்தேர்தல் வரும். ஆனால், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 20 நாட்களுக்குள் கட்சி மாறி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததன் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில் இதனை எதிர்கொண்டாக வேண்டும் எனவும் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன என தெரிவித்தார்.
இடைதேர்தல் வேட்பாளர் விவரங்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும், அதிமுக-பாஜக அணி, திமுக அணி, தவெக அணி என மூன்று அணிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், மக்கள் நலனை முன்னிறுத்தி களம் காணும் மாற்று சக்தியான இடதுசாரி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த மூன்று அணிகளிலும் இடம்பெறாத பிற அரசியல் கட்சிகளும் இடதுசாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் எனவும், இதற்காக மற்ற கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாகவும், 'தமிழகம் இனி இடது பக்கம்' என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது,
ஆனால், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நேரத்தை மட்டுப்படுத்தும் போக்கே நிலவுகிறது எனவும், அவையில் நான்கு இடதுசாரி உறுப்பினர்களும் மக்கள் பிரச்னைகளுக்காக முழுமையாகக் குரல் கொடுத்துள்ளனர் எனவும், மேலும் இருவர் சட்டப்பேரவைக்குச் செல்வது உழைக்கும் மக்களின் குரலை பலப்படுத்தும் என தெரிவித்தார்.
தவெக தலைமையிலான கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ இடதுசாரிகள் இடம்பெறவில்லை என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திவிட்டோம். அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்பவே தேர்தல் கூட்டணிகள் அமையும் , காலம் முழுவதும் ஒரே நிலைப்பாட்டில் எந்தக் கட்சியும் இருக்க முடியாது என தெரிவித்தார்.
இத்தேர்தலில் ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோதப் போக்குகள் குறித்துப் பேசுவோம். திமுக ஆட்சியில் கடுமையாக எதிர்க்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் மசோதாவை, தற்போதைய அரசு கடைசி நாளில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
நஞ்சை நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றுவதில் ஊராட்சி மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் அதிகாரத்தை நீக்கிவிட்டு, நகர்ப்புற நிர்வாக இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி சட்டம் திருத்தப்பட்டுள்ளது உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். நிலம் தொடர்பான முழு விவரங்களும் வருவாய்த் துறைக்கே தெரியும் எனும் சூழலில், அத்துறைக்குத் தொடர்பில்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் பொதுவெளியில் அமைச்சர்கள், தலைவர்கள் நாகரிகமற்ற முறையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இதற்கு பொதுக்கூட்டங்களில் ஆரவாரம் செய்வதும் தமிழக அரசியலின் தரம்தாழ்ந்த நிலையைக் காட்டுகிறது எனவும் தெரிவித்த அவர், பெண்களை அவதூறாகப் பேசுவோர் மீது அந்தந்தக் கட்சிகளின் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் இதுபோன்ற தரக்குறைவான பேச்சை அனுமதிக்காது என்றார்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்துகின்றன என தெரிவித்த அவர், குற்றங்கள் நடக்காத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தவறிழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை பாய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு கூறினாலும், எந்தெந்த நிறுவனங்கள், எத்தகைய உற்பத்தி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்ற எந்த விவரமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றார். அந்நிய மூலதனத்தை மட்டுமே நம்பியிராமல் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் கோவையின் சிறுகுறு தொழில்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளன, அவற்றுக்கான கடன் உதவி, மானியம், வரிச் சலுகைகள் எதுவும் அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் இதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பொருத்தமான இடமல்ல. 25 ஏக்கர் பரப்பளவில் இதனை அமைத்தால் அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார்.
இதனைவிடச் சிறந்த மாற்று இடங்கள் சென்னை மாநகருக்குள் உள்ளன, குறிப்பாக, அரசு வசமுள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 160 ஏக்கர் நிலம் போன்ற இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு பொருத்தமான இடத்தை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு ஆதரவா? தேர்தல் புறக்கணிப்பா? இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு என்ன? இன்று தெரியும்!!